top of page
Writer's pictureRaceTamil News

சவுதி அரேபியா அல்-அசாவில் பாரம்பரிய பொங்கல் நிகழ்ச்சி

சவுதி அரேபியா, அல்-அசா தமிழ்ச்சங்க 4-ம் ஆண்டு பொங்கல் திருவிழா 26-01-2024 அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவில், சுமார் 150 தமிழர்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

பொங்கல் விழா குத்துவிளக்கேற்றி சிறப்பாக துவங்கியது. விழாவிற்கு வருகைபுரிந்த‌ சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் அல்-அசா தமிழ்ச் சங்கம் செயற்குழு உறுப்பினர் திருமதி. மான்விழி சுரேஷ் அவர்கள் வரவேற்று பேசினார். அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் திரு. சிக்கந்தர் பாபு கோபார் ஹோபார் தமிழ்ச் சங்கம், முனைவர் திரு. ஜெரால்டு வில்சன் ஜெத்தா தமிழ்ச் சங்கம், மற்றும் தொழிலதிபர் திரு. உமா ஷங்கர் தமாம், ஆகியோர் பொங்கல் திருநாளின் மாண்பினையும், தமிழர்களின் சிறப்பையும் விளக்கி பேசினார்கள்.

தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு அதிகாலையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து, குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம் வரைதல், ஆடை அலங்கார அணிவகுப்பு, சதுரங்கம், சுண்டாட்டம், பெண்களுக்கான கோலமிடுதல், மருதாணி போடுதல், நெருப்பில்லாமல் சமைத்தல், மண்பானையில் வண்ணம் தீட்டுதல், ஆண்களுக்கான சதுரங்கம் மற்றும் சுண்டாட்டம் போன்ற போட்டிகள் விழா குழு சார்பாக நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்தனர்.

தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் விதமாக பல வகையான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அல்-அசா மாடர்ன் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் மற்றும் தமாம் இந்திய பன்னாட்டு பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம், கரகாட்டம், வீணை வாசித்தல், குறிப்பாக யோகா, சிறுவர் சிறுமியரின் ஆடை அணிவகுப்பு, குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆடல் பாடல் பார்ப்பவர் அனைவரையும் பரவசப்படுத்தியது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது தனித்திறமையை வெளிப்படுத்திய அனைத்து மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அல்-அசா தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள், திரு. செந்தில் வடிவேல், முனைவர். திரு. நாகராஜன் கணேசன், திரு. அசோக், திரு. ரமேஷ், திரு. ரவூப், முனைவர் திரு. பரமசிவன், திரு. தாமஸ், திரு. சம்பத், திரு. முஹம்மது இம்ரான் திரு. முத்துராமன், திரு. சுரேஷ், திரு. யோசுவா, திரு. சுபஹான், திருமதி, ஷாலிஹா, திருமதி மஞ்சுளா, முனைவர். அருணா, மருத்துவர். சூர்யா, திருமதி. ஷர்மிளா, திருமதி. கீதா மற்றும் திருமதி. ஸ்ரீதேவி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் கலந்துகொண்ட‌ பார்வையாளர்க‌ள் அனைவருக்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி காலை மற்றும் மதியம் அறுசுவை விருந்துகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் முனைவர் திரு. நாகராஜன் கணேசன் நன்றியுரை வழங்க தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுபெற்றது.


அன்புடன் சிராஜ்

530 views0 comments

Commentaires


bottom of page