
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர்களுக்கான அடையாள அட்டை விழிப்புணர்வு மற்றும் பதிவு செய்யும் இரண்டாவது சிறப்பு முகாம் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தின் பத்தாஹ் பகுதியில் ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் கடந்த 09 ஆகஸ்ட் 2024 அன்று சிறப்பாக நடந்தேறியது.

தமிழின் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் கால் நூற்றாண்டுகளாக சேவையாற்றி வரும் அமைப்பு ரியாத் தமிழ்ச் சங்கம். அயலகத் தமிழர்களுக்கான நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்கிற புலம்பெயர் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை. ரியாத் தமிழ்ச் சங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் நலன்களுக்காக கடந்த 2022 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலவாரியம் அமைத்து, நீட்சியாக அயலகத் தமிழர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மே 2024 இல் அயலகத் தமிழர் நலவாரியம் அறிமுகப்படுத்தி, முதல் மூன்று மாதங்களுக்கு அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 200 ரூ கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது.
இந்தக் கட்டண விலக்கானது வரும் ஆகஸ்ட் 15 துடன் முடிவடையும் நிலையில், இது குறித்து ரியாத் தமிழ்ச் சங்கம் சமூக வலைத்தளங்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, கடைநிலை ஊழியர்களாகப் பணியாற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு இதுவரை தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துக் கொடுத்து உதவியுள்ளது.

கடந்த ஜூலை 26 அன்று ரியாத் நியூ செனையா பகுதியில் ஏற்பாடு செய்திருந்த முதல் முகாமைத் தொடர்ந்து இரண்டாவது சிறப்பு முகாமை 09.08.2024 வெள்ளிக்கிழமை அன்று சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தமிழர்கள் அதிகமாக ஒன்று கூடும் பகுதியான பத்தாஹ்வில் நடத்தியது. இதில் இரு நூறுக்கும் அதிகமான புலம்பெயர் தமிழர்களுக்கு அயலகத் தமிழர் அடையாள அட்டை விண்ணப்பித்துக் கொடுக்கப்பட்டது.
முன்னதாக அடையாள அட்டையின் முக்கியத்துவத்தையும், பயன்பாட்டையும் காணொளி மூலம் விளக்கி விழிப்புணர்வும் செய்யப்பட்டது.

இந்த முகாமில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஹைதர் அலி, இணை செயலாளர் இர்ஷாத், செயற்குழு உறுப்பினர்கள் கபீர், ஆரிப் அப்துல் சலாம், ஜமால் சேட், வசீம் ராஜா, அலெக்ஸ், அஹமது இம்தியாஸ், தன்னார்வலர்கள் ஃபைசுதீன், புரோஸ், காமேஸ், செந்தில் குமார், இஸ்சத் பாபுஜி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கபீர் ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்தச் சிறப்பு முகாமைத் திறம்பட ஏற்பாடு செய்திருந்தார்.
தொடர்ந்து சமூக வலைத்தளம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், தொடர்பு கொள்ளும் புலம்பெயர் தமிழர்களுக்கு அடையாள அட்டை விண்ணப்பித்துக் கொடுக்கப்படும் என்றும் ரியாத் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.
அன்புடன் Arif Abdul Salam
留言