சவுதி அரேபியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமிழ் மக்களை சந்தித்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயலாளரும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவருமான அப்துல் சமது MLA அவர்களின் ஜித்தா வருகையை முன்னிட்டு கடந்த 24-9-24 அன்று இந்திய தூதரகத்தில் சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் ஜித்தா இந்திய துணைத்தூதர் ஃபஹத் கான் சூரி அவர்கள் மற்றும் ஹஜ்ஜுக்கான கான்சல் முகமது ஜலீல் அவர்களிடம் கடந்த 29.6.24 அன்று மக்காவிலிருந்து மதீனா செல்லும் வழியில் நடந்த வாகன விபத்தில் மரணமடைந்த தமிழ்நாடு ஹாஜிகள் சாதிக் பாஷா, இர்ஷாத் பேகம் ஆகியோருக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத்தை விரைந்து வழங்கிடவும் மேலும் கடந்த ஆண்டுகளில் தமிழ்நாடு ஹாஜிகளுக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்தும் வரும் ஆண்டில் அவற்றை சரி செய்யவும், எதிர்வரும் 2025 ஹஜ் சமயத்தில் ஹாஜிகளுக்கு சேவையாற்றிட அரஃபா மீனா ஆகிய இடங்களில் தன்னார்வலர்களுக்கு சிறப்பு அனுமதி, தமிழ்நாடு ஹாஜிகள் தங்குமிடங்களில் தமிழ் மொழியில் வழிகாட்டி பலகைகள் உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை ஹாஜிகளின் நலனுக்கான ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது முன்வைத்தார்.
அனைத்தையும் கவனமாக கேட்டு கொண்ட துணை தூதர் ஃபஹத் கான் சூரி அவர்கள் அனைத்தையும் இயன்ற அளவு சரி செய்வதாக உறுதியளித்தார். மேலும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு
பல சிறந்த ஆலோசனைகளையும் வழங்கினார்.
குறிப்பாக, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பாக வருகை தரும் வழிகாட்டிகள் ஹாஜிகளுடன் இணைந்து வருகை தரவும், ஹஜ்ஜில் ஏற்படும் சிரமங்களை சமாளிப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்திடவும், நடுத்தர வயதிலே நல்ல உடல்நலத்துடன் ஹஜ் கடமையை நிறைவேற்ற தமிழக முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் துணை தூதர் ஃபஹத் கான் சூரி அவர்கள் ஆலோசனை வழங்கினார். ஒரு மணி நேரம் நடந்த இந்த கலந்துரையாடலில் ஜித்தா IWF மண்டல தலைவர் காரைக்கால் அப்துல் மஜீத், துணை தலைவர் முகவை அப்துல் சமது, JTS சிராஜ், பொறியாளர் காஜா மைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல்:
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்
(தமுமுகவின் அயலக பிரிவு)
ஜித்தா மேற்கு மண்டலம்,
சவுதி அரேபியா.
அன்புடன் M. சிராஜ்
Comments