
கடந்த ஜூலை 26 அன்று ரியாத் செனையா பகுதியிலும், ஆகஸ்ட் 9 அன்று தமிழர்கள் அதிகம் ஒன்றுகூடும் ரியாத் பத்தாஹ் பகுதியிலும் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களைத் தொடர்ந்து கடந்த 15.8.2024 அன்று வியாழக்கிழமை ரியாத் மலாஸ் பகுதியில் தமிழர்கள் அதிகம் ஒன்றுகூடும் தம்பீஸ் உணவகத்தில் சிறப்பு முகாமை ரியாத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் திரளாகக் கலந்து கொண்ட தமிழர்களுக்கு அயலகத் தமிழர் அடையாள அட்டை குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான விளிம்புநிலை தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையும் விண்ணப்பித்து கொடுக்கப்பட்டது.

தமிழின் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் கால் நூற்றாண்டுகளாக சேவையாற்றி வரும் ரியாத் தமிழ்ச் சங்கம், சவுதி நியூஸ் வாயிலாகத் தமிழ்நாடு அரசிற்கு பின்வரும் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது. அயலகத் தமிழர் அடையாள அட்டை விண்ணப்பிக்க கூடுதலாக இன்னும் மூன்று மாதங்கள் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 55 என்பதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்றும் ரியாத் தமிழ்ச் சங்கம் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

இந்த முகாமில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஹைதர் அலி, இணைச் செயலாளர் இர்ஷாத், முன்னாள் தலைவர் வெற்றிவேல், செயற்குழு உறுப்பினர்கள் கபீர், ஆரிப் அப்துல் சலாம், வசீம் ராஜா, அலெக்ஸ், தன்னார்வலர்கள் ஃபைசுதீன், புரோஸ், காமேஸ், செந்தில் குமார், இஸ்சத் பாபுஜி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கபீர் ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்தச் சிறப்பு முகாமைத் திறம்பட ஏற்பாடு செய்திருந்தார்.

ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் இதுவரை ஆயிரத்தி ஐநூறுக்கும் அதிகமான விளிம்புநிலை தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை விண்ணப்பித்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும், பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் ரியாத் தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை அயலகத் தமிழர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத புலம்பெயர் தமிழர்களை, தங்களுக்கான அடையாள அட்டைக்கு விரைவாக பதிவு செய்து கொள்ளுபடியும் ரியாத் தமிழ்ச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அன்புடன் Arif Abdul Salam
Kommentare