
சவுதி அரேபியாவில் உள்ள அல்அசாவில், தமிழர் திருநாளான பொங்கல் விழாவானது, அல் அசா தமிழ்ச் சங்கம் சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்ப் பண்பாட்டை போற்றும் விதமாக பாரம்பரிய உடையில் புதுப்பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்வுடன் காலை 7:30 மணிக்கு விழா துவங்கியது.

அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், குறிப்பாக திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி, பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றில் பெரும்பாலான குழந்தைகள் பங்கேற்று பரிசுகளை வென்றனர். மேலும், பெரியவர்களுக்கான உறியடித்தல், கோலமிடுதல், மருதாணி போடுதல் போன்ற பாரம்பரிய தமிழர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
Zee தமிழ் தொலைக்காட்சி புகழ் சஞ்சிதாவின் இன்னிசைக் கச்சேரியும் குழந்தை அத்வைதாவின் யோகாவும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், மெல்லிசைப் பாடல்கள், நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முத்தாய்ப்பாக, “மறதி! வரமா? சாபமா?”எனும் தலைப்பில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் கவிஞர் எம்.கே. மீரான் தலைமையில் நடைபெற்றது. இதில் “வரமே” என்ற அணியில் கவிஞர் வாசுகி, கவிஞர் நாகேந்திரன் மற்றும் பிருந்தாவும், “சாபமே” என்ற அணியில் கவிஞர் இராஜபிரபு, கவிஞர் சித்ராதேவி மற்றும் கவிஞர் இளையதேவியும் பங்கேற்று தங்களுக்கே உரித்தான பேச்சில் கலகலப்பாக பேசி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக சவுதி அரேபியத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் (UTS) பொதுச் செயலாளர் எஸ்.கே. எஸ். சிக்கந்தர் பாபு, மற்றும் சவுதி அரேபியத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் (UTS) பொருளாளர் உமா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அல் அசா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் முனைவர். நாகராஜன் கணேசன், முனைவர். பரமசிவன் மணி, முனைவர். சிவகுமார், திரு. ரவூப், பொறியாளர் அருண், பொறியாளர். நடராஜன், பொறியாளர் சதீஷ், ஷர்மிளா பரமசிவன், ஷாலிஹா ரவூப், அனிதா சிவகுமார் மற்றும் முனைவர் அருணா நாகராஜன் சிறப்பாக செய்திருந்தனர்.

அன்புடன் M.Siraj
Comments