ஜெத்தா: ஓஐசிசி (OICC) மேற்கு மண்டலக் குழு நடத்திய மறைந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி அவர்களின் நினைவு மாநாட்டில், மக்களுக்காக அர்ப்பணிப்புடன் வாழ்ந்து, ஜனரஞ்சகத்தை வெளிப்படுத்திய தனித்துவமிக்க நிர்வாகி, அரசியல் தலைவர் உம்மன் சாண்டி என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
எழுபது ஆண்டுகளாக சமூகப்பணியில், பொதுப்பணியில் தன்னை அர்ப்பணித்தவர், அக்கறை மற்றும் கருணை ஆகியவற்றின் உருவகமாக திகழ்ந்தவர் உம்மன் சாண்டி.
சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற அவரின் மக்கள் தொடர்புத் திட்டம் சாமானிய மக்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது, 11 லட்சம் பேருக்கு 242 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உதவிகளைச் செய்திருப்பது மக்கள் மனதில் என்றும் நீங்காமல் உள்ளது.
குறிப்பாக விழிஞ்சம் துறைமுகம், கண்ணூர் விமான நிலையம், கொச்சி மெட்ரோ, ஸ்மார்ட் சிட்டி போன்ற பெரிய வளர்ச்சித் திட்டங்கள், உம்மன் சாண்டி அவர்களின் விடாமுயற்சியும், அசைக்க உறுதியான நிலையும், திடமான முடிவுகளுக்கு கிடைத்த வெற்றி என்று ஓஐசிசி மேற்கு மண்டலக் குழுத் தலைவர் ஹக்கீம் பரக்கால் தெரிவித்தார்.
புலம்பெயர் சமூகத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்த உம்மன் சாண்டி, சாதாரண மக்களும் அணுகக்கூடிய நிர்வாகியாகவும், அரசியல் தலைவராகவும் இருந்தார் என்று OICC குளோபல் கமிட்டி உறுப்பினரும் OICC ஹெல்ப் டெஸ்க் ஒருங்கிணைப்பாளருமான அலி தெக்குதோடு கூறினார்.
கேரள வளர்ச்சி வரலாற்றில் தலை நிமிர்ந்து நிற்கும் விழிஞ்சம் துறைமுகத் திட்டம் உள்ளிட்ட பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு உம்மன் சாண்டிக்கு கேரளா கடமைப்பட்டிருப்பதாகவும், அரசியல் என்ற பெயரில் பொய்க் கதைகளை உருவாக்கி உம்மன் சாண்டி அவர்கள் வேட்டையாடப்பட்டதாகவும் கேஎம்சிசி ஜெத்தா மத்தியக் குழுத் தலைவர் அபுபக்கர் அரிம்பிரா தெரிவித்தார்.
ஜெத்தா நவோதயா பிரதிநிதி ஸ்ரீகுமார் மாவேலிக்கார கருத்து தெரிவிக்கையில், 50 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக ஜொலித்த உம்மன் சாண்டி, கேரளத்தின் வளர்ச்சியிலும், எளிய மக்களின் பிரச்சனைகளிலும் அயராது தலையிட்டு, முன்மாதிரியான பொது ஊழியராகவும், நிர்வாகியாகவும் திகழ்ந்தார் என்று கூறினார்.
நியூ ஏஜ் மன்றத் தலைவர் பிபிஏ ரஹீம் கருத்துத் தெரிவிக்கையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவருடனும் நட்புடன் பழகியவர், அடக்கம், எளிமை போன்ற பண்புகளைக் கொண்ட தலைவர் உம்மன் சாண்டி என்று பெருமைப்பட்டார்.
உம்மன் சாண்டியின் மக்கள் தொடர்புத் திட்டமும், சாமானியர்களுடனான அவரது தொடர்பும் கேரள மக்களை மட்டுமன்றி தமிழ் மக்களின் அன்பையும் ஈர்த்ததாக ஜெத்தா தமிழ்ச் சங்கப் பிரதிநிதி சிராஜ் தெரிவித்தார்.
தொடர்ந்து, சமுதாய தலைவர்கள் நசீர் வவாகுஞ், காஜா முஹிதீன், ஹீர் மஞ்சலி, முஜீப் திரிதாலா, ஆசாத் போரூர், முஸ்தபா பெருவள்ளூர், அஷ்ரப் அஞ்சலன், அனில்குமார் பத்தனம்திட்டா, மகளிர் பிரிவு பிரதிநிதி சிமி அப்துல் காதர், ஓஐசிசி மண்டல கமிட்டி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் மறைந்த உம்மன் சாண்டி அவர்களை நினைவு கூர்ந்து பேசினர்.
வரவேற்பு உரையினை செயலாளர் அஷாப் வர்க்கலா வழங்க, பொருளாளர் ஷெரீப் அரக்கல் நன்றி கூறினார்.
அன்புடன் M சிராஜ்
Comments