
சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உலகளாவிய தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (THE RISE) மற்றும் அனைத்துலக தமிழ் பொறியாளர்கள் குழுமம் (G-TEF)ன் துவக்கவிழா நிகழ்ச்சி 23-02-2024 வெள்ளிக்கிழமை அன்று THE HOLIDAY INN வளாகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
உலகெங்கிலும் வாழும் தமிழ் பேசும் பொறியாளர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வளர்கள், பல்துறை வல்லுணர்கள் மற்றும் பிரபலங்களை ஒன்றிணைக்கும் “எழுமின் (RISE)” அமைப்பின் நிறுவனர் அருட்திரு. ஜெகத் கஸ்பார் அவர்களின் தலைமையில் இந்திய தூதரக அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தமிழ்தாய் வாழ்த்துடன் மாலை 4.30 மணியளவில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் பொறுப்பாளர் மற்றும் எழுமின் சவூதி பிரிவின் துணைத்தலைவர் திரு. மாலிக் அவர்கள் வரவேற்புரையாற்றினார். எழுமின் சவூதி பிரிவின் தலைவர் திரு. சாகுல் ஹமீத் அவர்கள் மற்றும் அனைத்துலக பொறியாளர்கள் கூட்டமைப்பின் சவூதி பிரிவு தலைவர் திரு.ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் அறிமுகவுரையை தொடர்ந்து அருட்திரு. ஜெகத் கஸ்பார் அவர்களுடன் இணைந்து இந்திய தூதரகத்தின் வணிக மற்றும் பொருளாதார ஆலோசகர் திருமதி. மனுஸ்ம்ரிதி அவர்கள் தி ரைஸ் (THE RISE) மற்றும் ஜி டெஃப் (G-TEF)ன் சவூதி அரேபிய பிரிவுகளை தொடக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

பொறியாளர் மற்றும் தலைமைத்துவ பயிற்சியாளர் திரு. பைசல் அவர்களின் சவூதி தொழில்வாய்ப்புகள் தொடர்பான கலந்தாய்வு, டாக்டர். கபாலி அவர்களின் தொழில் வியூகம் தொடர்பான பயிற்சி பட்டரை, அருட்திரு. ஜெகத் கஸ்பார் அவர்களின் எழுச்சி சொற்பொழிவு, DuVolks நிறுவன தலைவர் திரு. சல்மான் அவர்களின் தொழில்முனைவோருக்கான ஆலோசனை, ALLCARE GROUP நிறுவனர் திரு. சுல்தான் அல்மன்சூர் அவர்களின் மருத்துவ அறிவியலில் தொழில் வாய்ப்பு தொடர்பான அறிமுகம், நேட்ச்சுரல்ஸ் நிறுவன தலைவர் திரு. சாக்கோச்சன் அவர்களின் முகமை (Franchise) தொழில் வாய்ப்பு, எழுமின் வளைகுடா தலைவர்களின் வாழ்த்துரை, பொறியாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் கலந்தாய்வுக்கூடம், மேலும் நிகழ்ச்சியின் பிரதான புரவலர்களின் தொழிற்குறிப்புகள் ஆகிய நிரல்களுடன் திரு.சிவா அவர்களின் ஒருங்கிணைப்பில் மிக சுவாரசியமாக தொடர்ந்தது இந்நிகழ்ச்சி.
இறுதியாக சவூதி உட்பட வளைகுடா மற்றும் பிற நாடுகளில் இருந்து கலந்துகொண்ட பெருந்திரளான பொறியாளர்கள், திறனாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் புரவலர்களுக்கு திரு. மாதவன் அவர்கள் வழங்கிய நன்றியுரையை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு இரவு விருந்துடன் இனிதே நிறைவு பெற்றது.

“ *எழுமின் விழிமின் குறிசாரும் வரை நில்லாது செல்மின்* ” என்ற சுவாமி விவேகானந்தரின் சொல்லுக்கிணங்க 21 ஆம் நூற்றாண்டு தமிழரின் தலைநிமிர் காலம் என்ற இலக்கை அடையும் வரை நில்லாது உழைக்க வளைகுடா தமிழர்களும் இணைந்து கொண்டதில் பெருமிதம் கொள்வதாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
Comments